வியாழன், 19 மே, 2011

லண்டனில் நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு !

  • 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கொள்ளும் நிகழ்வு லண்டனில் இன்று நடைபெறுகின்றது.

    பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாரகரில் பிரசித்திபெற்றதும், அதிகளவிலான உல்லாசப்பயணிகளை கவரும் இடமுமான ரவல்கர் சதுக்கத்தில் இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

    பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (18-05-2011) பிற்பகல் 6:00 மணிமுதல் பிற்பகல் 8:30 மணிவரை நிகழுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாலை 4:00 மணிமுதல் இப்பகுதியை நோக்கி தமிழர்கள் வருகைதர ஆரம்பித்திருந்தனர்.

    முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது இழந்த தம் உறவுகளின் திருவுருவப்படத்தோடு அவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் இந்தக் கண்னீரும், அவர்கள் கைகளில் தங்கியுள்ள படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் படங்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் தமிழர்களை மட்டுமன்றி வேற்றினத்தவரையும் கண்கலங்க வைத்தது.

    தமிழர் வரலாற்றில் காலா காலமாக இனவழிப்பு நடைபெற்று வந்தாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதமே மனிதத்தையே நடுங்கவைக்கும் அளவிற்கு சிறுவர், பெரியோர், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடன்றி கொத்துக்கொத்தாக 100,000 க்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டதன் அடையாளமாய் போர் முடிவுற்ற நாளான மே 18 இரத்தம் தோய்ந்த நாளாகவும், ” தமிழர் இனவழிப்பு நினைவுநாள்” ஆகவும் தரணியெங்கும் பரந்துவாழும் தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.

    பிரித்தானியத் தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது ஈழவிடுதலைக்கான தமிழர் போராட்டத்தின் வெற்றிக்குரிய முதற்படியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக