நெஞ்சில் ஈரமற்ற வரண்டு இறுகிய கற்பாறைகளால் தமிழ் இதயங்களை நசுக்கிப் பிழிந்த சாற்றில் இருந்து சிங்கள சமூகம் அரசியற் கெந்தகம் ஆகிவிட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு இப்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு. இந்து சமுத்திரம் சார்ந்த வல்லரச நலன்கள் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டது. நுனித்துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித்துலாவுக்கு மாறிவிட்டது.
பச்சைக் கண்களின் பார்வையில் முள்ளிவாய்க்காலில் சிங்கமும் – புலியும் சண்டையிட்டன என்பதுதான் தெரியும். ஆனால் யார் யாரோ நலன்களுக்காகவெல்லாம் வெள்ள முள்ளிவாய்க்கால் இரத்த வாய்க்கால் ஆனது. பச்சைக் கண்களால் பார்க்கும் அரசியற் கண்ணற்றோரின் பார்வையில் யுத்தம் முடிவடைந்து விட்டது எனும் கூற்றே ஒலிக்கிறது. ஆனால் உண்மையில் அதன் முழுப் பரிமாணத்துடனான யுத்தம் இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது.
இந்து சமுத்திரத்தில் துலாவெனக் காட்சியளிக்கும் இலங்கைத்தீவில் இதுவரை காலமும் நுனித் துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித் துலாவுக்கு மாறியுள்ள இடமாற்றம்தான் யுத்தத்தில் ஏற்பட்டுள்ளது. நிகழ்ந்து முடிந்தது சமர். தொடர்கிறது யுத்தம். அந்த யுத்தம் தனது ஐந்தொகைக் கணக்கை நிறைவு செய்ய இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும். அந்த ஐந்தொகை தமிழருக்கு சாதகமாய் முடியுமென வரலாற்றுப் பதிவேடு கட்டியம் கூறுகிறது.
துறைமுகங்கள், விமானநிலையங்கள், கேந்திரக் கதவுகள் என்பனவற்றை பொருளாதார ஓடைக்குள்ளால் இலங்கைத்தீவில் திறக்க முனைவதன் மூலம் ஒரு புதிய வல்லரசின் எழுச்சி இந்து சமுத்திரத்தில் உதயமாகியுள்ளது. அதனைத் தடுக்க முயலும் வல்லரசுகளுக்கும் எழுச்சிபெறும் வல்லரசுக்கும் இடையிலான போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிங்கம் – புலி வடிவில் அரங்கேறி தமிழரின் இரத்தாறு ஓடியது.
புலிக் கொடியை வீழ்த்துவதன் மூலம் மேற்படி ஆதிக்க அரசுகள் தமது போராட்டத்தை சிங்கக் கொடியின் நிழலில் சமரசம் செய்யலாம் என ஒரு கணக்குப் போட்டன. அப்படி வல்லரசுகளிடையேயான பல வகைத் திரைமறைவுப் போராட்டங்களின் பின் பல சமரசங்கள் அந்த வல்லரசுகளிடையே இடம் பெற்றிருப்பது உண்மைதான். இப்படி ஒரு எண்ணத்தின் பின்னணியில் அரசமைத்துள்ள சிங்கக் கொடியின் நிழலில் சமரசம் காணலாம் என சிங்கக் கொடிக்கு பல வல்லரசுகள் காற்றூதின. புலிக்கொடி சாய்ந்தது சிங்கக் கொடி பறந்தது. ஆனால் சிங்கக் கொடியின் அதிகாரத் துலாக்கோல் இரத்தச் சகதியில் நிலைதடம் மாறி அங்கிங்காய் அலையத் தொடங்கியது. இதனால் முள்ளிவாய்கால் இரத்தாறு யுத்தத்தின் முடிவாய் அன்றி வல்லரசுகளின் நிலையெடுப்பாய் உருமாறியது. இது வரலாற்றின் தவிர்க்க முடியாத விதியென முரண்பாடு பற்றிய வரலாற்றியல் கூறுகிறது.
சிங்கக் கொடி வல்லரசுகளிடையே சமரசத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு பதிலாக அதன் இயல்பான முரண்பாட்டு வளர்ச்சியின் நிமித்தம் சிங்கக் கொடியின் செங்கோல் ஒரு தொகுதி வல்லரசுகளுக்கு எதிரான மறுதொகுதி வல்லரசுகளின் பக்கம் சாயத்தொடங்கியது. தமிழ் மக்களின் மண்டை ஓடுகளை அதிகாரத்திற்கான வாக்குகளாக எண்ணும் படலம் ஆரம்பமானபோது மேற்படி வல்லரசுகளின் நிலையெடுப்புக்கள் திரைக்கு பின்னால் நிகழ்ந்தன. ஆனால் அரசியல் வெளிச்சத்தில் திரைக்குப் பின்னால் நின்ற உருவங்கள் அணிதிரள்வது தெரிந்தது.
இனவாதம் தாரை தம்பட்டம் முழங்க மண்டை ஓட்டுச் சிம்மாசனத்தின் மீது ராஜபக்சவுக்கு மீள் முடி தரித்தது. முடிதரிக்கும் சிங்கள மன்னன் முதலில் கடல் கடந்த உலாப் புறப்படுவது இந்தியாவுக்குத்தான். ஆனால் இம்முறை அதற்கு மாறாக மன்னன் ரஷ்சியா சென்று முடிக்குரிய பட்டம் சூடிவந்துள்ளார். இது இந்தியாவில் இருந்து தாம் விலக்கிச் செல்வதாகவும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்வதாகவும் அமைந்த ஓர் அரசியல் ஓலையாகவே உள்ளது.
மன்னனின் கொடி சீனா பக்கம் சாய்கிறதே ஆயினும் முதலாவது உலாவை சீனாவில் ஆரம்பிப்பதன் மூலம் இந்திய அமெரிக்க அரசுகளை ஆத்திரப்படுத்தக் கூடாது என சிங்கள இராஜ தந்திரம் எண்ணியுள்ளது. ஆதலால் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு புறம்பான தனது செயற்பாட்டை கோடி காட்டும் வகையில் தன் திசை மாறும் பயணத்தை ஒரு வகை இடைக் கோட்டுக்குள்ளால் போகக் கூடிய இடைவெளி ரஷ்சியாவுக்கான பயணமாகவே அமைய முடிந்தது. ஏனெனில் ரஷ்சியா இந்தியாவின் பாரம்பரிய நண்பன். அதேவேளை அது திசைமாறலை வெளிப்படுத்தக் கூடிய புள்ளியாகவும் ரஷ்சியாவின் இன்றைய சர்வதேச ஸ்தானம் உள்ளது. இவற்றைக் கவனித்தே உலாவரும் முதல் நாடாய் ரஷ்சியா தேர்தெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இதன் அரசியல் இராஜதந்திரப் பரிபாசையானது அரசியல் வடுவாய் இந்திய அமெரிக்க அரசுகளின் அடிவயிற்றில் சுடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனாதிபதி வேட்பாளராய் நின்ற சரத் பொன்சேகா இராணுவச் சட்டத்தின் கீழ் நடுநிசியில் கைதுசெய்யப்பட்டதும் மறுநாள் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் பொன்சேகாவின் இல்லம் சென்று அவரின் மனைவிக்கு ஆறுதல் கூறினர் என்பது ஒரு புறமும் சீனத் தூதரகம் தன் இருக்கையில் இருந்தபடி றகனின் கண்களை விழிப்பாக்கிக் கொண்து என்பது மறுபுறமும் நடந்தேறிய மேடை நாடகங்கள் ஆயின. இப்போது திரைக்குப் பின்னால் அன்றி மேடையில் பாத்திரங்கள் உலாவின.
முள்ளிவாய்க்காலில் பறக்கத் தொங்கிய சிங்கக் கொடியின் பட்டொளிக்காக வல்லரசுகள் நிலையெடுக்கத் தொடங்கின. ஆதலால் முள்ளிவாய்க்கால் இரத்தாற்றின் வீச்சு யுத்தத்தின் முடிவாக அன்றி அது ஒரு சமரின் முடிவாய் நின்று வெடிக்கப் போகும் ஒரு பெரும் யுத்ததிற்கான வல்லரசுகளின் நிலையெடுப்பாய் மாறியுள்ளது. களம் முள்ளிவாய்க்காலில் இருந்து இப்போது கொழும்புக்கு மாறியுள்ளது. களமாற்றம் நிகழ்ந்து யுத்தம் மேலும் அளவுமாற்றத்திற்கு போய்விட்டது. இந்நிலையில் நிலையெத்துள்ள வல்லரசுகள் இப்போது முதற்கட்டமாய் குத்துச்சண்டை வீரர்களின் பாணியில் இலக்குகளை அவதானிக்ககின்றன.
அடுத்து அவை அடியெடுப்புகளை மேற்கொள்ளும். அடியெடுப்புக்கள் முன்நோக்கியும் பின்நோக்கியும் பக்கவாட்டுக்கும் இடம்பெற நரம்புகள் புடைப்பேறி செவ்வண்ணம் ஆகும். நரம்புகள் செவ்வண்ணமாய் புடைப்பெடுக்க சில மாதங்கள் தேவைப்படும். செவ்வண்ண நரம்புகள் யுத்தத்திற்கான வீதிப்படம் ஒன்றை வரைந்தெடுக்கும். இவ்வீதிவழியே அடியெடுப்புக்கள் புதுவேகம் பெற்று நெஞ்சோடு நெஞ்சாய் மல்யுத்த வீரர்கள் மோதும் போது கல்லும் கல்லும் உரசி தீப்பற்ற சில ஆண்டுகளாகும்.
தீக்குச்சி உரசலுக்காய் காய்ந்து வரண்ட விறகுக் குவியலென இனவாத வரலாற்றில் தீவு மொறுமொறுத்து இருக்கின்றது. பிராந்திய ரீதியான அனைத்து முரண்பாடுகளும் இன ஒடுக்குமுறை வடிவில் முறுக்கேறியுள்ளன. கருத்தரித்த முரண்பாடுகள் வலியெடுக்கத் தொடங்கிவிட்டன. வரலாறு சமுத்திரம் கொள்ளாத் துரோகங்களை காட்சிப்படுத்தத் தொடங்கிவிட்டது. அரசியல் இப்போது ஒழிவு மறைவற்ற நிர்வாண கோலத்தில் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. அது தான் அணிந்திருந்த பண்பாடு, நாகரீகம், ஒழுக்கம், வெட்கம், கௌரவம், தர்மம், நீதி, சட்ட ஒழுங்கு என்ற ஆடை ஆபரணங்கள் என்ற அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு லங்காபுரி அரசியல் நிர்வாண கோலத்தில் நத்தனமாடத் தொடங்கியுள்ளது.
கையில் தீக்குச்சியுடன் அரசியல் நிர்வாண கோலத்தில் நர்த்தனமாடும் லங்கா ராணி தான் வளர்த்தெடுத்த வெடிமருந்துக்கிடங்கின்மீது தீக்குச்சியை வீசுவதற்கான நிலையெடுப்பு உச்சம் பெற சில ஆண்டுகள் ஆகும் என வரலாறு பறையறைகிறது. அப்போது நிகழவல்ல ஊழிப் பெருநடனத்தில் ஈழத்தழிழர்கள் விளக்கேந்தி நிற்பர் என்று இன்னொரு முழக்கத்தையும் பறை முழங்கத் தவறவில்லை.
1958 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலைக் கலகம் பற்றிய தனது நூலை நிறைவு செய்கையில் சிங்களவரான அதன் ஆசிரியர் தாஸி வித்தாஸி ஒரு கேள்வியை எழுப்புவதோடு அந் நூலை முடிக்கிறார். அதாவது தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனத்தவரும் ‘பிரியும் நிலைக்கு வந்துவிட்டோமா?’ என்பதே அந்தக் கேள்வியாகும். தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ‘ஆம்’ பிரியப்போகின்றோம் என்ற ஆணையை தெளிவாக வழங்கியுள்ளனர். தமிழ் மக்களும் நாம் பிரிவதுதான் விதியென்று தமது ஆணையையும் அவர்கள் வழங்கியுள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இனப்பகைமையை அகற்றுவதற்கு பதிலாக ஜனாதிபதி இனப்பகைமையை கவசமாக அணிந்து தேர்தல் அரங்கில் காட்சியளித்தார். பகைமையை அகற்றுவதற்கு பதிலாக பகையை அகற்றவல்ல பாதையை அகற்றினார். இனவாத சேற்றை அகற்றுவதற்கு பதிலாக சேறு வெளியேறவல்ல பாதையை அகற்றினார். ஆதலால் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கும் இந்த உலகிற்கும் ஒரு செய்தியை தமது வாக்குச் சீட்டு வாயிலாய்க் கூறினார். அதாவது ‘நீங்கள் வேறு, நாங்கள் வேறு’ உங்களுடன் இணைய நாங்கள் மாட்டோம் என்று தமிழரைப் பிரித்து வைப்பதாகவே அவர்களின் ஆணையிருந்தது. தமிழ் மக்களின் ஆணையும் அப்படித்தான்.
பி.ஏச்.பாமர் எனும் பிரித்தானிய பேராசிரியர் ஒருவர் 1961 ஆம் ஆண்டு எழுதிய நூலிற்கு இலங்கை: இரண்டுபட்ட நாடு என்ற தலைப்பையே கொடுத்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையாகவே இலங்கை இரண்டுபட்டுத்தான் உள்ளது. Breake up of Sri Lanka என்ற தலைப்பிலான பேராசியர் ஏ.ஜே.வில்சனின் நூலும் (1988) இலங்கை இரண்டுபட்டுவிட்டது என்ற செய்தியையே தெளிவாகச் சொல்லியுள்ளது. அந்த வகையில் தேர்தல் முடிவும் இலங்கை இரண்டுபட்டுள்ளது என்ற ஆணையை தெளிவாகக் காட்டுவதுடன் அதன் காலப்பிரசவத்திற்காக வரலாற்றின் அடி மடி நோகத் தொடங்கிவிட்டது என்பதையே இன்றைய தென் இலங்கை நிலைமைகள் கோடி காட்டத் தொடங்கியுள்ளன.
நுனித்துலாவில் எரிந்த பந்தம் முள்ளிவாய்க்காலில் எழுந்த விசையால் அடித்துலாவிற்கு மாறியுள்ளது. தீப்பற்றியுள்ள அடித்துலா சமுத்திரம் தழுவிய வல்லரச போட்டியின் விளைவாய் அது நடு நெம்புகோலுடன் இரண்டாய் உடையும் நாள் ஒன்று வரும். அடித்துலா நுனித் துலா என வல்லரசுகள் அணிவகுப்பர். யார் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இதுவே வரலாற்று அகராதி சொல்லி வைக்கும் அரசியல் அர்த்தமாகும்.
மாண்டுபோன எம்மக்களின் பெயரால் மூளையால் சிந்தித்து இதயத்தால் முடிவெடுப்போம். வரலாறு எம்பக்கம் நாளை விடியும். விடியுமளவும் கையில் விளக்கெடுப்போம். சூரியன் உதிப்பதை யார் தடுப்பர்?
வெடிப்பை மேலெழுந்தவாரியாய்ப் பார்ப்போர் அதைப் பூசிமெழுகிவிடலாமென நினைக்கின்றனர். ஆனால் அத்திவாரமே தளர்ந்துள்ளதென்பதால் இனியும் பூசிமெழுக எடுக்கும் எந்த முயற்சியும் பயனளிக்க போவதில்லை. தீவு இரு பாளங்களாய் பிளவுபட்டுள்ளது என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உச்சியில் அடித்தாற்போல் பறையறைந்திருக்கின்றன. ‘தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே இட்டு நிரப்பிட முடியாத அதாள பாதள பிளவு இருக்கின்றது’ என்று இலங்கைக்கான இந்தியாவின் உயர்தானிகராய் இருந்தவரான திரு.ஜே.என்.டிக்சிற் ’Assignment Colombo’ என்ற நூலில் எழுதியுள்ளவையும் இங்கு நினைவில் நிறுத்தத்தக்கவை.
இலங்கைத்தீவில் மையங்கொண்டுள்ள உள்நாட்டு வெளிநாட்டு முரண்பாடுகள் அவைகளுக்கிடையே ஏற்படக்கூடிய அமுக்க விசைகளும் இலங்கைத் துலாவை அதன் நடுநெம்புகோலுடன் முறிக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. இதைத்தான் இலங்கையின் அரசியல் கருத்தரித்திருக்கிறது. தமிழர்களிடம் சிந்த இனியும் இரத்தம் இல்லை. ஆனால் மேற்படி கருக்கொண்டுள்ள முரண்பாடுகளை சரிவரக் கையாண்டால் தமிழரை ஒரு துளி இரத்தமும் சிந்தவிடாது வரலாறு அவர்களுக்கு விடிவெள்ளியைக் காட்சியாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தாயகன்.